

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கவர்னர் கிரண்பேடி மீது சரமாரியாக குற்றஞ்சாட்டினார். அரசின் முடிவுகளில் தேவையில்லாமல் தலையிடுகிறார். மக்கள் நல திட்டங்களில் குறுக்கீடு செய்து கோப்புகளுக்கு அனுமதி அளிக்க காலதாமதம் செய்கிறார்.
அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டு அவர்களை செயல்படவிடாமல் தடுக்கிறார். அதிகாரிகளின் நேரத்தை வீணடிக்கிறார். கோப்புகளை 3 நாட்களுக்குள் மேல்துறை தலைவர், செயலாளராக இருந்தாலும் தேக்கி வைக்க கூடாது என்று நான் உத்தரவிட்டுள்ளேன்.
ஆனால் கவர்னர் அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டு அன்றாட பணிகளை செய்ய விடாமல் தடுக்கிறார் என்று நாராயணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமியின் குற்றச் சாட்டுகளுக்கு கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்-அப்பில் பதில் அளித்து உள்ளார். கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்-அப்பில் கூறியிருப்பதாவது:-
அதிகாரிகள் 3 நாட்களுக்கு மேல் கோப்புகளை வைத்திருக்கக் கூடாது என முதல்- அமைச்சர் கூறியிருக்கிறார். இதனை அவர் தான் முதலில் கடைப்பிடிக்க வேண்டும், அவரும், அவரது அமைச்சரவை சகாக்களும் கோப்புகளை நீண்ட நாட்களாக தேக்கி வைக்கின்றனர்.
இதனால் சில திட்டங்கள் தாமதமாகிறது. குறிப்பாக பதவி உயர்வுகளை செய்ய முடியவில்லை, மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.
அவருக்கும் எனக்கும் நடந்த கடித பரிமாற்றங்களில் இது நன்றாகவே தெரியும். அவர் 2 விதமான விதிகளை கடைபிடித்து வருகிறார். அவருக்கு தனியாக ஒரு விதியும், அதிகாரிகளுக்கு ஒரு விதியையும் வைத்துள்ளார். அதிகாரிகளிடம் இருக்கும் கோப்பு எங்கே இருக்கிறது என்பதை கண்காணிக்க டிராக்கிங் சிஸ்டம் இருக்கிறது.
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கோப்புகளில் மட்டும் தான் மேற்கண்ட முறை இல்லை. எனவே இதனை அவர் தான் (முதல்வர்) மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கவர்னர் மாளிகையை பொறுத்தவரை உடனுக்குடன் கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனை வெளிப்படையாக தெரிவித்து வருகிறோம்.
இது தொடர்பாக எனக்கும், முதல்வருக்கும் நடந்த கடித பரிமாற்றத்தை தங்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளேன். இதில் முதல்வருக்கு எந்த காலவரையரையும் இல்லை. இதனால் தான் சில பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியது உள்ளது. எனவே, இதனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.