

கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காளான்காட்டு புதூரை சேர்ந்தவர் திருவேங்கடசாமி. இவரது மகன் கவுதம்ராஜ்(வயது24). திருவேங்கடசாமிக்கு சிங்காரம்பாளையத்தில் சொந்தமாக நிலம் உள்ளது.
சம்பவத்தன்று கவுதம் ராஜ் சிங்காரம் பாளையத்திற்கு சென்று அந்த நிலத்தை சுத்தம் செய்தார். பின்னர் அந்த குப்பைகளை அனைத்தும் ஒரே இடத்தில் சேர்த்து தீயிட்டு கொழுத்தினார்.
அப்போது எதிர்பாராத விதமாக தீ கவுதம்ராஜின் உடையில் பிடித்தது. சிறிது நேரத்தில் அவர் உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலிதாங்க முடியாமல் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கிணத்துக் கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.