

சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நகைக்கடை நடத்தி வருபவர் உக்கம்சந்த். இவரது நகைக் கடையில் ராஜேஷ் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
உக்கம்சந்த் ராஜேசிடம் நகைகளை செய்ய தங்க கட்டிகளை கொடுத்து அனுப்புவார். அப்படி செய்யும் நகைகள் மற்றும் தங்க கட்டிகளின் இருப்பை மாதம் ஒரு தடவை சரி பார்ப்பார்.
சமீபத்தில் நகைகளின் இருப்பு விவரங்களை பார்த்தபோது 8½ கிலோ தங்க நகை குறைவாக இருந்தது தெரிய வந்தது. மறுநாளில் இருந்து ராஜேஷ் தலைமறைவாகி விட்டார்.
இது தொடர்பாக உக்கம்சந்த் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த மோசடியில் ராஜேசுக்கு சங்கர், செந்தில், விஜய், குருதரண், சரத்குமார் ஆகிய 5 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. 6 பேரும் சேர்ந்து நகைகளை திருடியுள்ளனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உடந்தையாக இருந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ½ கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ராஜேசை போலீசார் தேடி வருகிறார்கள்.