

சூலூர்:
கோவை சூலூரை அடுத்த பீடம்பள்ளியை சேர்ந்தவர் நடராஜன்(வயது 48). கட்டிட தொழிலாளி. இவருக்கு சிவபாரதி (42) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் நேற்று முன்தினம் வீட்டு முன்பு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் நடராஜனுக்கு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி(30) என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
ஈஸ்வரி அதேபகுதியை சேர்ந்த கோபி (35) என்பவரை 2-வது திருமணம் செய்தவர். நடராஜன் தனது மனைவியுடன் பேசுவது கோபிக்கு பிடிக்கவில்லை. இதை அவர் கண்டித்த போது இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கோபி உருட்டுக் கட்டையால் நடராஜனை அடித்துக் கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
தலைமறைவான கோபி, ஈஸ்வரி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இருவரும் நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்துக்கு தப்பி சென்றது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை சூலூர் அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.