

ஆம்பூர் வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் வேலன் (வயது 40). லாரி ஓட்டுநரான இவர், குடியாத்தம் பாக்கம் அடுத்த செல்வபெருமாள் நகரில் உள்ள தனது சகோதரி லோகேஷ்வரி வீட்டில் தங்கியிருந்து அவருக்கு சொந்தமான லாரியை ஓட்டி வந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் (42) மனைவி நிர்மலாவுடன் (35) வேலனுக்கு தகாத உறவு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வேலனும், நிர்மலாவும் உல்லாசமாக இருந்தபோது சசிகுமார் வந்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் அம்மிக் கல்லால் தாக்கி வேலனை கொன்றனர். இதையடுத்து சசிகுமாரும், நிர்மலாவும் விபத்தில் வேலன் காயமடைந்ததாக கூறி ஆட்டோவில் ஏற்றி வந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வேலன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக பரதராமி போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு பாக்கத்தில் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் வேலன் அம்மிக் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சசிகுமார், நிர்மலா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தன. அதாவது, கொல்லப்பட்ட வேலனும், சசிக்குமாரும் நெருங்கிய நண்பர்கள். 2 பேரும் கூட்டாக சேர்ந்து, குடியாத்தம், ஆம்பூர், உமரா பாத் பகுதியில் பைக்குகளை திருடி விற்றுள்ளனர்.
அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பங்கிட்டு, உல்லாசமாக இருந்துள்ளனர். திருட்டு தொழிலில் அதிக பணம் கிடைத்தால், எப்போதாவது தான் வேலன் லாரி ஓட்டும் வேலைக்கு சென்றுள்ளார்.
பைக் திருட்டு தொடர்பாக 2 பேர் மீதும் குடியாத்தம், ஆம்பூர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. அடிக்கடி சிறைக்கு சென்று ஜாமீனில் வந்துள்ளனர்.
திருட்டு தொழிலே கதி என்று ஆன பிறகு, அக்காள் வீட்டில் தங்கி இருந்த வேலன் கூட்டாளியான சசிக்குமார் வீட்டில் தினமும் தங்க ஆரம்பித்தார்.
அப்போது, நிர்மலாவுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. சசிக்குமார் வீட்டில் இல்லாத நேரத்திலும், இரவில் அவர் தூங்கிவிட்ட பிறகும், அவரது மனைவியுடன் வேலன் உல்லாசமாக இருந்தார். ஒரு கட்டத்தில், அவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அரசல், புரசலாக கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனாலும், சசிக்குமார் கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டார்.
நேற்று முன்தினம் இரவு அவர் வெளியில் சென்றார். அப்போது நிர்மலாவும், வேலனும் உல்லாசமாக இருந்தனர். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த சசிக்குமார் வீடு திரும்பினார்.
மனைவியுடன் கூட்டாளி உல்லாசமாக இருந்ததை பார்த்து அவர் ஆத்திரமடைந்து தகராறில் ஈடுபட்டார். அப்போது, சசிக்குமாரை வேலன் தாக்கினார். தடுக்க வந்த கள்ளக்காதலியையும் அவர் தாக்கினார்.
பிறகு, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், சற்று நேரத்தில் திரும்பவும் வந்தார். அப்போது வேலன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் வந்த அவர், சசிக்குமார் முன்பே அவரது மனைவியை மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்தார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் வேலனை தாக்கி கீழே தள்ளிய சசிக்குமார் வீட்டில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து தலையில் போட்டு கொன்றார். கொலைக்கு நிர்மலாவும் உடந்தையாக இருந்தார்.
ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்று விபத்தில் இறந்ததாக நாடகமாடினர். போலீசார், பாக்கம் பகுதியில் சோதனை நடத்தியபோது, விபத்து நடந்ததற்கான சுவடே இல்லை.