மதுரையில் 2 குழந்தைகள் எரித்துக்கொலை- தாய் தற்கொலை முயற்சி

மதுரையில் 2 குழந்தைகளை எரித்து கொன்று தாயும் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
Published on

மதுரை:

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேலவாசலை சேர்ந்தவர் பாண்டி (வயது 34). கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (28). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வாணிஸ்ரீ (4), வர்ணிகாஸ்ரீ (2) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

பாண்டி கூலி வேலைக்கு சென்றதால் போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. மேலும் சரிவர வேலைக்கு செல்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் குடும்பம் வறுமையில் வாடியது.

இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் பாண்டிக்கும், தமிழ்ச் செல்விக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கோபத்தில் பாண்டி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். குடும்பத்தை நடத்த முடியாமலும், கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாலும் தமிழ்ச்செல்வி வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இதன் காரணமாக குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

இன்று அதிகாலை மகள்கள் வாணிஸ்ரீ, வர்ணிகாஸ்ரீ ஆகியோர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தமிழ்ச்செல்வி மனதை கல்லாக்கி கொண்டு 2 மகள்கள் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார்.

மேலும் தனது உடலிலும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 3 பேர் உடலிலும் தீ மளமள வென பற்றி எரிந்தது. இதனால் அவர்கள் வலியால் அலறினார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

3 பேரும் தீ பிடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

இதுகுறித்து திடீர்நகர் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் குழந்தைகள் வாணிஸ்ரீ, வர்ணிகா ஸ்ரீ ஆகிய 2 பேரும் தீயில் கருகி பரிதாபமாக இறந்து விட்டனர்.

தமிழ்ச்செல்வி உடல் கருகிய நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரும் தீக்குளித்ததில் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை எரித்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com