‘குளோபல்’ ஆஸ்பத்திரியில் இன்று நடராஜனுக்கு சிறுநீரகம் - கல்லீரல் மாற்று ‘ஆபரேஷன்’
சசிகலாவின் கணவர் நடராஜன் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
74 வயதான அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சென்னை அருகே பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்த போது அவரது உடல் உறுப்புகளில் சிறுநீரகமும், கல்லீரலும் முற்றிலுமாக செயல் இழந்தது தெரியவந்தது. அவருக்கு ஆரம்பகட்ட சிகிச்சையாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
என்றாலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைப்பார் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து மூளை சாவு அடைந்த ஒருவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் உடல் உறுப்புகள் கேட்டு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் 2 உடல் உறுப்புகளும் உடனடியாக கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நடராஜனின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது.
உடல் உறுப்புகள் கிடைக்கும் வரை நடராஜன் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. இதனால் நடராஜன் உயிர் பிழைப்பாரா? என்கிற நிலையும் எழுந்தது.
பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் முகமது ரேலா, குளோபல் ஆஸ்பத்திரியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குனர் டாக்டர் இளங்குமரன் உள்ளிட்ட டாக்டர் குழுவினர் நடராஜனின் உடல்நிலையை கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே நடராஜனின் உறவினர் சங்கர் தனது கல்லீரலையும், இன்னொரு உறவினரான கலாவதி சிறுநீரகத்தையும் தானமாக கொடுக்க முன் வந்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடி வயல் என்ற ஊரை சேர்ந்த கார்த்திகேயன் என்ற 19 வயது தொழிலாளி விபத்தில் சிக்கி தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு தலையில் ரத்த கசிவு காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது உயிரை காப்பாற்ற முடியாது என்பதால் நல்ல நிலையில் இருக்கும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் அவரது பெற்றோர் மட்டும் உறவினர்களுக்கு யோசனை தெரிவித்தனர். இதை அவர்கள் ஏற்று கொண்டனர்.
மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகள் தேவைப்படுவோர் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை குழுவிடம் பதிவு செய்யப்பட்டது.
அப்போது நடராஜனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தேவைப்படும் தகவல் தஞ்சை மருத்துவமனை டாக்டர்களுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து தொழிலாளி கார்த்திகேயனின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை நடராஜனுக்கு பொருத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டது. ஒருவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை இன்னொருவருக்கு பொருத்த வேண்டும் என்றால் இருவரது ரத்த குரூப்பும், திசுக்களும் ஒரே குரூப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் உறுப்புகள் பொருந்தும்.
வாலிபர் கார்த்திகேயனின் ரத்த குரூப்பும், திசுக்களும் நடராஜன் ரத்த குரூப்புடன் ஒத்து போனதால் உடல் உறுப்புகளை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து கார்த்திகேயன் உடல் தஞ்சையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது.
இதற்காக கோவையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் விமானம் திருச்சி கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு கார்த்திகேயன் உடலுடன் அந்த விமானம் சென்னை புறப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு இந்த விமானம் சென்னை வந்தது. பின்னர் விமான நிலையத்தில் இருந்து குளோபல் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் உடல் கொண்டு வரப்பட்டது.
நேற்று நள்ளிரவில் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று ஆபரேஷன் தொடங்கியது. பல மணிநேரம் நடந்த ஆபரேஷனுக்கு பின் மூளைச்சாவு அடைந்த வாலிபர் கார்த்திகேயனின் சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை நடராஜனுக்கு பொருத்தப்பட்டது.
நடராஜனின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பொருத்தப்பட்ட தகவலை தினகரன் இன்று காலை உறுதி செய்தார்.
இது தொடர்பாக அவர் ஆஸ்பத்திரியில் அளித்த பேட்டி வருமாறு:-

