மரக்காணம் அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது

இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மரக்காணம் அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது
Published on

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் பவித்ரா(வயது 23). கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பவித்ராவை காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடினர். எங்கும் அவர் காணவில்லை.

இதுகுறித்து மரக்காணம் போலீசில் பவித்ராவின் தாயார் லோகநாயகி புகார் செய்தார். அதில் தனது மகள் பவித்ராவை ஆலத்தூர் பகுதியை சேர்ந்த பிரதாப்(23) என்பவர் ஆட்டோவில் கடத்தி சென்று விட்டார். அதற்கு உடந்தையாக அவரது நண்பர்கள் சுரேஷ்(27), பிரகாஷ்(28) ஆகியோர் இருந்தனர். கடத்தப்பட்ட என் மகளை மீட்டுக்கொடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மைக்கில்இருதயராஜ் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண் பவித்ராவையும், பிரதாப்பையும் தேடி வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் பஸ்நிறுத்தத்தில் பிரதாப், பவித்ரா நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் திண்டிவனம் நடுவர் நீதிமன்றதிதில் ஆஜர் படுத்தினர். நீதிபதி சாந்தி இளம்பெண்ணை கடத்திய வாலிபர் பிரதாப்பை காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் பவித்ராவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு போலீசாரிடம் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பிரதாப் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com