நெல்லை அருகே பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர்

நெல்லை அருகே பள்ளி மாணவியை ஆசிரியர் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தல்
கடத்தல்
Published on

பணகுடி:

கூடங்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பணகுடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அதே பள்ளியில் படிக்கும் காவல் கிணறு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் அந்த ஆசிரியரிடம் தொடர்ந்து 4 வருடமாக (அதாவது 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை) தமிழ் பாடம் கற்று வந்தார்.

இந்த நிலையில் அந்த ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை பள்ளியில் இருந்து நீக்கம் செய்தது. இதையடுத்து இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த மாணவியை நேற்று முதல் காணவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே சமயம் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஆசிரியரையும் நேற்று முதல் காணவில்லை. மேலும் அந்த ஆசிரியர் தனது வீட்டில் செல்போனை வைத்து விட்டு சென்று விட்டார். இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனவே அந்த ஆசிரியர், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com