

ஆற்காடு:
ஆற்காடு புது தெருவை சேர்ந்தவர் ராஜா என்கிற ராஜேந்திரன் (வயது 59). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 10-ந்தேதி ராஜேந்திரன் மாயமானார். இது குறித்து அவரது மனைவி ரமாதேவி ஆற்காடு டவுன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் தனது கணவர் ராஜேந்திரன் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வருகிறது. எனவே அவரை கண்டுபிடித்து தரும்படி கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாயமான ராஜேந்திரன் வீடு திரும்பினார். அவர் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
9-ந்தேதி தன்னை ரியல் எஸ்டேட் சம்பந்தமாக பேசி அட்வான்ஸ் தொகை தருவதாக கூறிய சிலர் தன்னை ரத்தினகிரியில் இருந்து காரில் கடத்தி சென்றனர்.
அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர். பின்னர் எனது நண்பர் வேப்பூரை சேர்ந்த தணிகைவேல் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கார் மூலம் அழைத்து வந்து ரூ.2 லட்சத்திற்கு உண்டான நகை பெற்று கொண்டனர்.
மேலும் அவர்கள் ஆற்காட்டில் உள்ள எனது வீட்டிற்கு அழைத்து வந்து எனது மனைவி ரமா தேவியிடம் ரூ.2 லட்சத்தை பெற்றுக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். எனவே தன்னை கடத்தி பணம் நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ராஜேந்திரன் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஆம்பூரை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.