தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தல்: 7 பேர் கும்பலுக்கு வலை

ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி சென்ற 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தல்: 7 பேர் கும்பலுக்கு வலை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 46) ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சங்கரம்மாள். முத்துகிருஷ்ணன் தொழில் செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக வட்டி கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கிருஷ்ணன் கொடுத்த பணத்தை முத்துகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பின்னர் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து நேற்று மாலை முத்துகிருஷ்ணன் புதுக்கோட்டையை அடுத்த கே.தளவாய்புரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். அவர் அல்லிகுளம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அங்கு வந்த கிருஷ்ணன், புதுக்கோட்டையை சேர்ந்த கனி உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் முத்துகிருஷ்ணனை காரில் கடத்தி சென்றனர்.

பின்னர் அந்த கும்பல் முத்துக்கிருஷ்ணன் மனைவி சங்கரம்மாளுக்கு போன் செய்துள்ளனர். அப்போது நாங்கள் முத்துகிருஷ்ணனை கடத்தி சென்னைக்கு கொண்டு வந்துள்ளோம். தங்களிடம் முத்துகிருஷ்ணன் கடன் வாங்கிய பணத்தை உடனடியாக திருப்பி தந்தால் தான் அவரை விடுவோம் என கூறி போனை வைத்து விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சங்கரம்மாள் உடனடியாக இது குறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர் முத்துகிருஷ்ணனை அவர்கள் எங்கு கடத்தி சென்றுள்ளனர் என்று விசாரணை நடத்தி 7 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com