அலங்காநல்லூர் அருகே திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண் காரில் கடத்தல்

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடத்தல்
கடத்தல்
Published on

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர் சேரியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் சங்கீதா (வயது 21). இவர் அலங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார்.

சங்கீதாவிற்கு வருகிற 30-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இருப்பினும் அவர் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை அவர் வழக்கம்போல வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்றார்.

இரவில் வேலை முடிந்ததும் அவரது தம்பி குமரேசன் மருத்துவமனை சென்று சங்கீதாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். பெரிய ஊர்சேரி அருகே வந்தபோது அங்கு ஒரு கார் நின்றுகொண்டிருந்தது அதில் 5 பேர் இருந்தனர். அவர்கள் திடீரென குமரேசன் மற்றும் சங்கீதா வந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குமரேசன், மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது காரில் இருந்த 5 பேரும் சங்கீதாவை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றி கடத்திச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தனது தந்தை வேல்முருகனுக்கு குமரேசன் தகவல் கொடுத்தார். அவர் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் கடத்தப்பட்ட புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் புதுப்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com