

ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை அருகே வல்லம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் தாய் கட்டுப்பாட்டில் இருந்து வந்தார்.
தினமும் காலை ஒரத்தநாடு அண்ணாசிலை அருகில் இருந்து கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்றுவந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக காலை அண்ணாசிலை அருகில் கல்லூரி பேருந்துக்காக காத்திருந்தார். அவரது அருகில் மற்ற பேருந்துகளுக்காக பொதுமக்கள் சிலர் காத்திருந்தனர்.
அப்போது சற்று தூரத்தில் சொகுசுகார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து 2 வாலிபர்கள் இறங்கி சுற்றுமுற்றும் நோட்டமிட்டவாறு நின்றனர். அருகில் பேருந்துக்காக காத்திருந்த சிலர் பேருந்து வந்தவுடன் அதில் ஏறி சென்றுவிட்டனர்.
இதையடுத்து கல்லூரி பேருந்துக்காக தனியாக நின்றிருப்பதை கண்டதும் காரில் வந்த 2 வாலிபர்களும் காரை மாணவியின் அருகில் கொண்டுசென்று வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர். அப்போது மாணவி சத்தம்போட்டுள்ளார். அதனை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் மாணவியை காப்பாற்ற முயன்றனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் மாணவியை காருக்குள்தள்ளி வேகமாக காரை எடுத்து சென்றனர்.
அந்த காரை சில வாகன ஓட்டிகள் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் காரை மின்னல் வேகத்தில் ஓட்டி சென்றுவிட்டனர். சினிமா படப்பாணியில் கல்லூரி மாணவியை காரில் கடத்தி செல்வதை நேரில் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் கல்லூரி மாணவியை காரில் கடத்தியது சென்னையை சேர்ந்த சக்திவேல் மகன் விக்னேஸ்வரன் (22) என்பதும், அவருக்கு உதவியாக ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் சிவகுரு (21) இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களது செல்போன் எண்ணை கொண்டும், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கொண்டும் கார் எந்த வழியாக சென்றுள்ளது என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.