சங்கராபுரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தல்
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்த 18-வயது மாணவி தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி மாப்பிள்ளை பார்த்து வருகிற 27-ந் தேதி திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர்.
இதையடுத்து திருமண அழைப்பிதழ் அச்சடித்தல் உள்ளிட்ட திருமணத்துக்கான முன்னேற்பாடு பணிகளை மாணவியின் பெற்றோர் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வீட்டு தோட்டத்துக்கு சென்ற மாணவி வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்து இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை காணவில்லை.
விசாரணையில் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகன் மகாதேவன் என்பவர் மாணவியை கடத்தி சென்றதாகவும், இதற்கு அவருடைய தந்தை சுப்பிரமணி மற்றும் மல்லிகா, மணிமாறன் ஆகியோர் இருந்ததாகவும், வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம், 3 பவுன் நகையை காணவில்லை எனவும் மாணவியின் தந்தை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற மகாதேவனை வலைவீசி தேடி வருகிறார். மேலும் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் அவர் நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்தாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் காட்டுவன்னஞ்சூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

