பாலியல் புகாரை வாபஸ் பெறக்கோரி கன்னியாஸ்திரியை மிரட்டிய கேரள பாதிரியார்

கேரளாவில் பாதிரியாரின் பாலியல் புகாரை வாபஸ் பெறக்கோரி கன்னியாஸ்திரியை மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் புகாரை வாபஸ் பெறக்கோரி கன்னியாஸ்திரியை மிரட்டிய கேரள பாதிரியார்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் பிரான்கோ முல்லக்கல்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆயராக இருக்கும் பிரான்கோ முல்லக்கல், கோட்டயம், குரு விலங்காடு பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கோட்டயம் போலீசில் அந்த கன்னியாஸ்திரி புகார் கொடுத்தார். அதில் தன்னை ஆயர் பிரான்கோ முல்லக்கல் 13 முறை பாலியல் பலாத்காரம் செய்தார் எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பாக கோட்டயம் போலீசார் ஆயர் பிரான்கோ முல்லக்கல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக ஜலந்தர் சென்று அவரிடம் நேரில் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கான நடவடிக்கைகளை கோட்டயம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும் கன்னியாஸ்திரி கொடுத்த புகார் குறித்த ஆதாரங்களையும் திரட்டி வந்தனர்.

இந்நிலையில் ஆயர் பிரான்கோ முல்லக்கல் மீதான புகாரை வாபஸ் பெற வைக்கும் நடவடிக்கைகளில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போலீசில் சாட்சியம் அளித்த கன்னியாஸ்திரிகளை மிரட்டி புகாரை வாபஸ் பெறவைக்கும் முயற்சிகளும் நடந்தன.

இதில் அனுபமா என்ற கன்னியாஸ்திரியை ஆயரின் ஆதரவாளரான பாதிரியார் ஒருவர் மிரட்டும் ஆடியோ பேச்சு நேற்று மலையாள ஊடகங்களில் வெளியானது.

11 நிமிடங்கள் ஓடும் அந்த ஆடியோவில் பேசும் பாதிரியார், வழக்கை வாபஸ் பெற்றால் கன்னியாஸ்திரியின் குடும்பத்திற்கு 10 ஏக்கர் நிலமும், புதிய கான்வென்ட் கட்டிடமும் கட்டி தரப்படும் என ஆசைவார்த்தை கூறுகிறார்.

மேலும் வழக்கை வாபஸ்பெறாவிட்டால் கன்னியாஸ்திரி பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக அசாம், ஒடிசா மாநிலங்களுக்கு அவர் மாற்றப்படுவார் எனவும் பாதிரியார் எச்சரிக்கிறார்.

ஆனால் கன்னியாஸ்திரி, பாதிரியாரின் மிரட்டலுக்கு பயப்படபோவதில்லை எனக்கூறியதோடு, வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும் கூறுகிறார்.

இது பற்றி பாலியல் புகாரை விசாரிக்கும் தனிப்படை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது பற்றி கூறும் போது, இந்த விவகாரம் வழக்குக்கு கூடுதல் பலம் சேர்க்கும். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கில் இருந்து தப்பிக்க முடியாத நிலை ஏற்படும், என்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com