

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கனமழையாக மாறி கொட்டி தீர்த்து விட்டது. இதனால் கேரள மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்த மாதம் மட்டும் இதுவரை 66 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் பல இடங்களில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மலப்புரம், வயநாடு, இடுக்கி உள்பட 8 மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஏராளமான வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்து விட்டது. மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை, வயநாடு மாவட்டம் புத்துமலை ஆகிய பகுதிகள் நிலச்சரிவால் பெரிய அளவு பாதிப்பை சந்தித்துள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலியாகி உள்ளனர். கவளப் பாறையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 33 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
கவளப்பாறை, புத்து மலை பகுதியில் நிலச்சரிவில் மண்ணில் புதைந்த 57 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. இந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அதிநவீன உபகரணங்கள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்ணில் புதைந்துள்ள உடல்களை கண்டுபிடிக்க அதிநவீன ஒலி கதிர்களை மண்ணில் பாய்ச்சி அதன் மூலம் உடல்களை தேடி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் வசித்தவர்களில் பலர் நிலச்சரிவுக்கு முன்பே அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டனர். முகாம்களில் தங்கி உள்ள அவர்களை அழைத்து வந்து எந்த இடங்களில் வீடுகள் இருந்தது என்பதை அடையாளம் காட்ட செய்து அதன் மூலமும் மீட்புப்பணி நடந்து வருகிறது.
பேரிடர் மீட்புப்படை கமாண்டர் வினோஜ் ஜோசப் மீட்புப்பணிகள் பற்றி கூறியதாவது:-
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியில் மிகவும் கவனத்துடன் ஈடுபட்டு வருகிறோம். ஏனென்றால் இந்த பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மீட்புப்பணி வேகமாக நடைபெற முடியாத சூழ்நிலை உள்ளது. தினமும் பிணங்கள் கண்டெடுக்கப்படுகிறது. பல பிணங்கள் உருக்குலைந்த நிலையிலேயே காணப்படுகிறது.
மக்கள் அடையாளம் காட்டும் இடத்தில் இருந்து 10 அடி தூரம் தள்ளிதான் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்கள் பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்துள்ளனர். இடிந்த கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் இடிபாடுகளை அகற்றி பாதை அமைத்து கவனமாக உடல்களை மீட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.