கேரளாவில் சிறுவனால் பலாத்காரம்: 12 வயது சிறுமியின் கருவை கலைக்க ஐகோர்ட்டு தடை

கேரளாவில் 12 வயது சிறுமி அவரது உறவினரான சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமியின் வயிற்றில் வளரும் 28 வார கருவை கலைக்க கொச்சி ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
கேரளாவில் சிறுவனால் பலாத்காரம்: 12 வயது சிறுமியின் கருவை கலைக்க ஐகோர்ட்டு தடை
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை அவரது உறவினரான சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதில் சிறுமி கர்ப்பிணியானார். இதுபற்றி தெரிய வந்ததும் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் சிறுவன், சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுவன் மீது கற்பழிப்பு மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுவன் மைனராக இருந்ததால் அவரை போலீசார் சிறப்பு முகாமில் அனுமதித்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமியின் கருவை கலைக்க அனுமதி கோரி கொச்சி ஐகோர்ட்டில் சிறுமி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட்டு சிறுமியின் கரு குறித்து மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மருத்துவ அறிக்கையில் சிறுமியின் வயிற்றில் 28 வார கரு உள்ளது. அது நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நேரத்தில் கருவை கலைப்பது கருவுக்கும் அதை சுமந்துள்ள சிறுமிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கருவை கலைப்பது சரியல்ல என்று கூறப்பட்டிருந்தது.

மருத்துவ அறிக்கையில் கூறப்பட்ட தகவலின் பேரில் சிறுமியின் கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி வழங்கவில்லை. மாறாக சிறுமியை குழந்தைகள் நலவாரியம் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதித்து குழந்தையை பெற்றெடுக்க வேண்டும்.

அந்த சிறுமிக்கு மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு வழங்கும் நிவாரண நிதியை சிறுமியின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து சிறுமி மேஜரான பிறகு அவருக்கு வழங்க வேண்டும். இதனை காக்கநாடு குழந்தைகள் நலவாரியம் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com