

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள சோட்டாணிக்கரை பகுதியை சேர்ந்த 35 வயதான ஒரு பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருடன் 4½ வயது மகளும் வசித்து வந்தார். 3 வயதுடைய மற்றொரு மகள் அந்த பெண்ணின் பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார்.
அந்த இளம்பெண்ணுக்கும் கொச்சி பொன்னப்பரம்பு பகுதியை சேர்ந்த ரெஞ்சித் (வயது 33) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர் அடிக்கடி அங்கு வந்து பெண்ணுடன் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு அந்த பெண்ணின் மகள் திடீரென்று மாயமானார். அக்கம், பக்கத்தினர் கேட்ட போது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த மகள் மாயமாகிவிட்டதாக கூறினார். மேலும் இதுபற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
போலீசார் இதுபற்றி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அவரது முன்னுக்குபின் முரணான பதில் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது அந்த சிறுமி கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அந்த சிறுமியை கள்ளக்காதலன் ரெஞ்சித் தீர்த்துக்கட்டி உள்ளார். தலையை சுவற்றில் அடித்தும் கத்தியால் குத்தியும் கொடூரமான முறையில் இந்த கொலை நடந்துள்ளது. மேலும் சிறுமி என்றும் பாராமல் மதுபோதையில் ரெஞ்சித் அவரை பாலியல் பலாத்காரம் செய்த தகவலும் வெளியானது. கொலைக்கு பிறகு அந்த சிறுமியின் பிணத்தை ரெஞ்சித், சிறுமியின் தாய் ஆகியோர் சேர்ந்து வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். இந்த கொலைக்கு ரெஞ்சித்தின் நண்பர் பேசில் என்பவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சோட்டாணிக்கரை கோர்ட்டில் நடந்துவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை கொடூரமாக கொலை செய்த ரெஞ்சித்துக்கும் உடந்தையாக இருந்த அந்த சிறுமியின் தாய்க்கும் தூக்குதண்டனை விதித்தார்.
மேலும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கொலைக்கு உதவிய பேசிலுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கொல்லப்பட்ட சிறுமியின் தங்கைக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.