கேரளாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு - சட்டசபையில் மசோதா நிறைவேறியது

கேரள சட்டசபையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதிய உயர்வுக்கு வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரளாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு - சட்டசபையில் மசோதா நிறைவேறியது
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தலைமை கொறடா உள்ளிட்டோருக்கு சம்பளம் மற்றும் படிகளை உயர்த்துவது பற்றி பரிந்துரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.எம். ஜேம்ஸ் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் ஆய்வு செய்து அமைச்சர்கள் மற்றும் பிறரது சம்பளம் மற்றும் படிகள் ஆகியவற்றை ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.90 ஆயிரத்து 500 ஆக உயர்த்தவும், எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் படிகள் ஆகியவற்றை ரூ.39 ஆயிரத்து 500ல் இருந்து ரூ.70 ஆயிரத்திற்கு உயர்த்தவும் பரிந்துரை அளித்துள்ளது.

இதற்கான காரணங்களாக, கடந்த 5 வருடங்களில் பெட்ரோல், டீசல், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டசபை குழு கூட்டங்களில் பங்கேற்பதற்காக மாநிலத்தின் உள்ளே மற்றும் வெளியே பயணம் செய்வதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு விமான போக்குவரத்து படியாக ஒரு வருடத்திற்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வழங்கும் புதிய விதி இந்த புதிய சட்ட மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதிய தொகையை ஆயிரம் ரூபாய் உயர்த்துவதற்கான தனி சட்ட மசோதா ஒன்றிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.  இந்த புதிய சம்பள விகிதம் மற்றும் ஓய்வூதியம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com