

கொழிஞ்சாம்பாறை:
தமிழகத்தில் புளூவேல் விளையாட்டு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடைபெற்றது. தற்போது கேரளாவிலும் புளூவேல் விளையாட்டுக்கு மாணவன் பலியாகி இருக்கிறான்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வேங்கரையை சேர்ந்தவன் முகமது ரியாஸ் (14). இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை முகமது ரியாஸ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து வேங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன் உடலை மீட்டு திருஅங்காடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாணவனின் பெற்றோர் கூறும் போது, எங்கள் மகன் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் செல்போனில் புளூவேல் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தான். அதன் பாதிப்பு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். புளூவேல் விளையாட்டு தான் மாணவன் தற்கொலைக்கு காரணம் என போலீசாரும் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். புளூவேல் விளையாட்டால் மாணவன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.