கேரளாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் இணைந்த 100 வாலிபர்கள்: குரல் பதிவுகள் மூலம் கண்டுபிடிப்பு

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கேரளாவின் கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் இருந்து மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கேரளாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் இணைந்த 100 வாலிபர்கள்: குரல் பதிவுகள் மூலம் கண்டுபிடிப்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி செல்லும் இளைஞர்களை மூளை சலவை செய்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது கேரளா மாநிலம் கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 4 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் வளைகுடா நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சிரியா நாட்டுக்குள் புகுந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து கேரள வாலிபர்களை சிரியாவுக்கு அனுப்பி வைக்கும் நபர்கள், ஏஜெண்டுகளை கண்டுபிடிக்க உளவுத்துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டனர். அவர்கள் நடத்திய ரகசிய விசாரணையில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலாஜ், அப்துல் ரசாக், ரஷீத் ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்களை உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்த போது கேரளாவில் இருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் சிரியாவுக்கு அனுப்பபட்ட தகவல் கிடைத்தது.

மேலும் இவர்களை அனுப்பி வைத்ததற்கான விமான டிக்கெட் நகல்கள், சிரியாவுக்கு சென்றதற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரிகள், கேரள போலீசாருடன் இணைந்து கேரளாவில் இருந்து சிரியா சென்றவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர். இதற்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்றவர்கள், அங்கிருந்து உறவினர்களை தொடர்பு கொள்ளாமல் மாயமானவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்தனர்.

வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்கள் மூலம் தேடுதல் பணி நடந்தது.

இதில் வளைகுடா சென்ற கணவர்மார்கள் திடீர் என மாயமான தகவலும், அவர்கள் சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் இணைந்து விட்டதாக, அவர்களின் மனைவியர், உறவினர்களுக்கு அனுப்பிய பல குறுந்தகவல்களையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

சமீபத்தில் கயூம் என்பவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் சீருடையில் இருப்பது போன்ற படம் இன்டர்நெட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவரது குரல் பதிவும் போலீசாருக்கு கிடைத்தது.

இது போல ‌ஷஜில் என்பவரின் மனைவி அவரது சகோதரருக்கு அனுப்பிய குரல் பதிவையும் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த பதிவில் ‌ஷஜில், சிரியாவில் நடந்த ஜிகாத் போரில் இறந்து விட்டதாகவும், இதனால் அவரும் குழந்தைகளும் சிரியாவில் தவித்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

தன்னை போல இன்னும் பல பெண்கள் கணவன்மார்களை இழந்து புலம்பிக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இது போல சுமார் 300-க்கும் மேற்பட்ட குரல் பதிவுகளை போலீசார் சேகரித்தனர்.

இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கேரளாவின் கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் இருந்து மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இந்த தகவலை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர். மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கும் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூலம் சிரியா சென்ற கேரள வாலிபர்களை மீட்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com