

புதுடெல்லி:
டெல்லியில் அரசு மற்றும் தொகுப்பு பேருந்துகளில் அக்டோபர் 29-ம் தேதி முதல் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். இதன்படி, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நேற்று டெல்லியில் அமலுக்கு வந்தது.
டெல்லியில் மொத்தம் 5600 அரசு மற்றும் தொகுப்புப் பேருந்துகள் செயல்படுகின்றன. 10 ரூபாய் விலையிலான வெளிர்சிவப்பு நிற டிக்கெட்டுகள் மூலம் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு ரூ.140 கோடியில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, டெல்லியில் நேற்று பெண்கள் முதன்முறையாக இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று மட்டும் 4.77 லட்சம் பெண்கள் இலவச டிக்கெட்டுகள் பெற்று பயணம் செய்தனர்.
இது அரசுப்பேருந்துகளில் தினசரி பயணம் செய்வோர்களில் மூன்றில் ஒரு பங்காகும். அதாவது 34.49 சதவீதம் என டெல்லி போக்குவரத்து கழகம் தெரிவித்தது. டெல்லி அரசின் இந்த திட்டத்திற்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசு பேருந்துகளில் இன்று பயணம் செய்து இந்த திட்டத்தால் பயனடைந்த பெண்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
'பெண்கள் இலவச பயண திட்டம் குறித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிய சில பேருந்துகளில் இன்று பயணம் செய்தேன். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோரை சந்தித்தேன்.
இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்’, என தனது டுவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.