காட்பாடி அருகே ரெயிலில் பெண் பயணியிடம் 5 பவுன் நகை கொள்ளை

காட்பாடி அருகே ரெயிலில் பெண் பயணியிடம் 5 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

ஜோலார்பேட்டை:

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சஜித்சி நாயர். ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நிஷா நாயர் வயது(35). இவர்கள் ஐதராபாத் விமன்புரியில் வசித்து வருகின்றனர்.

கடந்த 6-ந் தேதி ஐதராபாத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்1 பெட்டியில் பயணம் செய்தனர்.

நள்ளிரவு வேலூர் மாவட்டம், காட்பாடி- லத்தேரி இடையே உள்ள சிக்னலில் ரெயில் நின்றது.

அப்போது 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் ரெயிலில் ஏறினார். தூக்கத்தில் இருந்த நிஷா நாயரிடம் இருந்த கைப்பையை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் அதிர்ச்சியடைந்த நிஷா நாயர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பயணிகள் கண்விழித்தனர். இந்த சம்பவத்தால் ரெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

கொள்ளையடிக்கப்பட்ட கைப்பையில் மோதிரம்,கம்மல் உட்பட 5 பவுன் தங்க நகை , 2 செல்போன், 2 வாட்ச் மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் இருந்தது.

இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

காட்பாடி- லத்தேரி இடையே உள்ள இந்த சிக்னலில் தொடர்ந்து ரெயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com