

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை சன்வே ஓட்டலில் தங்கியுள்ளனர்.
ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த நிலையில் நேற்று புதிதாக அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் அணிக்கு தாவி புதுவை ஓட்டலுக்கு வந்தனர்.
இதனால் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 20 ஆனது. ஏற்கனவே வெற்றிவேல் எம்.எல்.ஏ. தினகரன் ஆதரவாளராக இருக்கிறார். இவரையும் சேர்த்து தினகரன் அணிக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
புதுவை ஓட்டலில் தங்கியுள்ள பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை, பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு ஆகியோர் இன்று காலை ஓட்டல் வளாகத்தில் வாக்கிங் சென்றனர். அப்போது அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது கட்சி எங்களிடம் இருக்கிறது. ஆட்சி அவர்களிடம் இருக்கிறது. கட்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்து தங்கி இருக்கிறோம்.
எங்கள் தொகுதி மக்கள் எங்களுக்கு முழு ஆதரவு தருகிறார்கள். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நீங்கள் அங்கேயே தங்கி இருங்கள் என்று எங்களிடம் கூறுகிறார்கள். நல்லாட்சி நடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
எனவே, இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு ஏற்படும் வரை நாங்கள் இங்குதான் இருப்போம். நாங்கள் இங்கு சந்தோஷமாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த மனக்குறைவும் இல்லை.
தினகரனுக்கு ஆதரவாக இப்போது ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதாவது இன்னும் பல மடங்கு ஆதரவு எங்கள் அணிக்கு வரப்போகிறது. இன்று 8 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணிக்கு வருகிறார்கள். அவர்களும் புதுவை வருவார்கள். இதை தொடர்ந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணியில் சேருவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.