கதிராமங்கலத்தில் 3-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்

கதிராமங்கலத்தில் இன்று 3-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
கதிராமங்கலத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் ராஜாராமன்
கதிராமங்கலத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் ராஜாராமன்
Published on

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலம் பொதுமக்கள் ஊரை விட்டு வெளியேறி அங்குள்ள அய்யனர் கோவில் தோப்பில் தங்கி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த விவசாயி ராஜாராமன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் உடல் நலம் குறித்து கீழக்காட்டூர் அரசு ஆரம்ப நிலைய டாக்டர் ஆனந்தி மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர்.

அப்போது நீர் சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்த குறைபாடு இருவருக்கும் உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் கிட்னி பாதிக்கப்படும். உடல் நலம் மிகவும் மோசமாகி விடும். எனவே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என டாக்டர் அறிவுறுத்தினார்.

ஆனால் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டனர். மக்களின் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றனர். இன்றும் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

2 மணி நேரத்திற்கு ஒரு முறை 2 பேரின் உடல் நலத்தை பரிசோதிக்கும் வகையில் மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்தால் கதிராமங்கலத்தில் பதட்டம் நிலவுகிறது. மாணவர் அமைப்பினர் யாரும் மக்கள் போராட்டத்தில் பங்கேற்காத வகையில் ஊரின் எல்லை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் பகுதியில் தீயணைப்பு வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com