ரூ.3 கோடி மாமூல் கேட்டு மிரட்டல்: தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

மும்பையில் பிரபல கட்டுமான நிறுவன அதிபரிடம் 3 கோடி ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ரூ.3 கோடி மாமூல் கேட்டு மிரட்டல்: தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
Published on

மும்பை:

இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ள தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இக்பால் கஸ்கார் மராட்டிய மாநிலத்தில் வசித்து வருகிறார். துபாயில் இருந்த இவர் சில வழக்குகள் காரணமாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்.

இந்நிலையில், மராட்டிய மாநிலம், வடக்கு மும்பை பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு போன் மூலம் ஒரு கும்பலைச் சேர்ந்தவர் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் பதிவானது. இதனையடுத்து, இந்த வழக்கின்கீழ் இக்பால் கஸ்கார் தானே நகர போலீசாரால் கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அந்த கட்டுமான நிறுவன அதிபரிடம் நான்கு வீடுகளும் 30 லட்சம் ரொக்கப்பணமும் கேட்டு மிரட்டியதாக இவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருடன் மும்தாஜ் ஷேக் மற்றும் இஸ்ரார் அலி ஜமில் சய்யத் ஆகியோரும் கைதானார்கள். 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக தானே நகர் போலீஸ் நிலையத்தில் இவர்கள் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற மிரட்டல்களின் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து மாதந்தோறும் சுமார் 15 லட்சம் ரூபாயை தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான சோட்டா ஷகீலுக்கு மாமூலாக செலுத்திவருவதாக பிரபல ரவுடி பப்பு சாவ்லாவின் நெருங்கிய கூட்டாளியான பங்கஜ் கங்கர் என்பவன் சமீபத்தில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தான்.

இந்நிலையில், கட்டுமான நிறுவன அதிபரிடம் 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கில் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராஹிம், அவரது சகோதரர் அனிஸ் இப்ராஹிம் ஆகியோர் தற்போது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக தானே குற்றப்பிரிவு போலீசார் இன்று அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com