

ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் உள்ள காவல்நிலையம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் படையினரும், தீவிரவாதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு புல்வாமா மாவட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் அப்பகுதியில் அமைந்துள்ள காவல்நிலையத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர். அவர்களை வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர். இதையடுத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதன்காரணமாக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசாரின் தாக்குதலுக்கு தாக்குபிடிக்க முடியாத தீவிரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ஐந்து பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#tamilnews #JammuKashmir #Pulwamaencounter #PoliceStation