காஷ்மீரில் எதிர்க்கட்சி தலைவர்கள் படிப்படியாக விடுதலை

காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுகிறார்கள்.
மெகபூபா முப்தி
மெகபூபா முப்தி
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்திற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன் அந்த மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 5-ந்தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் மாநிலத்தில் கலவரம் வெடிக்கலாம் என கருதி பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத இயக்க தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். பலர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, முன்னாள் மந்திரிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பலரும் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 24 நாட்கள் முடிகிறது. இதுவரை எந்த தலைவரும் விடுவிக்கப்படவில்லை. அங்கு நிலைமை சீரடைந்து வருவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இயல்புநிலை திரும்பவில்லை என்றே அங்கிருந்து வருபவர்கள் கூறுகிறார்கள். மக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. ஆங்காங்கே ஒன்றிரண்டு கடைகள் மட்டும் தான் திறந்துள்ளன. அதுவும் சில மணி நேரம் மட்டுமே திறந்து விட்டு பின்னர் மூடிவிடுகிறார்கள். பதட்டமான பகுதிகளில் முற்றிலும் கடைகள் திறக்கப்படவில்லை.

சுமார் 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்காங்கே போராட்டங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பல்வேறு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தடை உத்தரவுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கனவே 79 போலீஸ் நிலைய பகுதியில் தடை உத்தரவு விலக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் மேலும் 12 போலீஸ் நிலைய பகுதிகளில் தடை உத்தரவை விலக்கி உள்ளனர்.

கடந்த வாரம் திங்கட்கிழமை ஆரம்ப பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டன. புதன் கிழமை நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் மாணவர்கள் வரத்து குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று முதல் உயர்நிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து கல்லூரிகளையும் திறப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் டெலிபோன் இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இண்டர்நெட் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்து இடங்களிலும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறியிருக்கிறது.

நிலைமை இன்னும் சீரடையும் வகையில் காவலில் உள்ள அரசியல் தலைவர்களை படிப்படியாக விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது சம்பந்தமாக மத்திய உள்துறை ஆலோசனை நடத்தியது. அதில் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மொகரம் பண்டிகையை முன்னிட்டு சில தலைவர்கள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.

அடுத்த மாதம் 10-ந்தேதி மொகரம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக 173 அரசியல் தலைவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளனர். யார்-யாரை விடுவிக்க வேண்டும் என்ற பட்டியலை மத்திய உள்துறை காஷ்மீர்அரசை கேட்டுக் கொண்டது.

அதன் அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டிய தலைவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களால் பிரச்சினை ஏற்படாது என கருதப்படும் தலைவர்கள் மட்டும் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.

முதலாவதாக முன்னாள் மந்திரி இம்ரான்அன்சாரி விடுவிக்கப்படுகிறார். தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். எனவே அவரை உடனடியாக விடுவிப்பது என்று முடிவு எடுத்துள்ளனர்.

தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட கடந்த 4-ந்தேதிக்கு பிறகு இதுவரை 4 பேர் பலியாகி இருப்பதாக சீனியர் போலீஸ் அதிகாரி இம்தியாஸ் குஷேன் கூறினார். அதில் ஒரு நபர் பாகிஸ்தான் பயங்கரவாதியால் கொல்லப்பட்டார். கலவரத்தில் ஒரு டிரைவர் பலியாகி உள்ளார்.

மேலும் பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் நடந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவரும், போலீஸ்காரர் ஒருவரும் பலியாகி உள்ளனர் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே ராஜூரி மாவட்டத்தில் நாடோடி சமூகத்தை சேர்ந்த அப்துல் காதீர், அவரது உறவினர் மன்சூர் அகமதுகோலி ஆகியோர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

நேற்று ஸ்ரீநகரில் பல இடங்களில் மர்ம நபர்கள் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். அதில் அரசுக்கு எதிராக வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இவற்றை பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஒட்டி இருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன.

காஷ்மீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கும் அதே நேரத்தில் அங்கு வளர்ச்சி திட்ட பணிகளை தீவிரமாக செய்வது என்று அரசு முடிவு எடுத்திருக்கிறது. ஏற்கனவே 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி காஷ்மீருக்கு ரூ.80 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகளை அறிவித்தார். அதன் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அடுத்த கட்டமாக மேலும் என்னென்ன வளர்ச்சி திட்டங்களை செய்யலாம் என்று மத்திய உள்துறை மற்றும் வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். முதல் கட்டமாக 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உடனடியாக உருவாக்குவது என்று அரசு முடிவு எடுத்துள்ளது.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைக்கு பல்லாயிரக்கணக்கானோரை தேர்வு செய்ய உள்ளனர்.

இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com