காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.
பாதுகாப்பு படையினர் - கோப்புப்படம்
பாதுகாப்பு படையினர் - கோப்புப்படம்
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில் உள்ள சர்சாலி கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று நள்ளிரவு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களைநோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். சில நிமிடங்கள் துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.

ஏற்கனவே கடந்த 3 நாட்களாக காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

3 நாட்களில் மட்டும் ராணுவ அதிகாரிகள் உட்பட 8 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் பயங்கரவாதிகள் சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாகதீன் அமைப்பு பின்னணியில் இருப்பதாகவும், இந்த அமைப்பின் தலைவரான ரியாஸ் என்பவர் அங்கு பதுங்கியிருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரிலேயே போலீசார் நேற்று தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போதுதான் மீண்டும் மோதல் நடைபெற்று பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் பயங்கரவாதி ஒருவன் பிடிபட்டுள்ளதாகவும், அவனிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் அதே நேரத்தில் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com