காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கரூர் குளித்தலை பள்ளி மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி அனுப்பினர். #CauveryManagementBoard
வகுப்பறையில் அமர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கடிதம் எழுதியபோது எடுத்தபடம்.
வகுப்பறையில் அமர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கடிதம் எழுதியபோது எடுத்தபடம்.
Published on

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கர்நாடக மாநிலம் உரிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 170 மாணவ, மாணவிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு தங்கள் கைப்பட கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில், ‘‘தமிழகத்தில் விவசாயம் குறைந்துவிட்டது. காரணம் காவிரி நீர் போதிய அளவு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. காவிரி பிரச்சினை குறித்த தங்களின் மேலான உத்தரவை உறுதியாக அமல்படுத்தும்படி, கர்நாடக மாநிலத்திற்கு அறிவுரை வழங்க தங்களை தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர வேண்டும் என்று கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள மாணவ-மாணவிகளை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். #CauveryManagementBoard

X

Maalai Malar
www.maalaimalar.com