

கரூர்:
கரூரில் காவிரி, அமராவதி ஆறுகளில் இருந்து குடிநீர் திட்டப்பணிகளின் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால் அமராவதி குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு விட்டது. அந்த பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காவிரி ஆறும் வறண்டதால் நீரேற்றும் நிலையங்களில் இருந்து போதுமான தண்ணீர் வருவதில்லை. இதனால் கரூர் நகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலை உள்ளது. ஒரு சில வீடுகளில் ஆழ்குழாய் கிணறு தண்ணீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
சுத்திகரிப்பு செய்ய எந்திரம் இல்லாதவர்கள் தண்ணீர் கேன்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகளில் குடிநீர் பயன்பாட்டிற்காக 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்களை அதிகமாக வாங்க தொடங்கி விட்டனர். இதனால் தண்ணீர் கேன் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இது குறித்து தண்ணீர் கேன் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கரூர் டவுன் பகுதியில் 16 நிறுவனங்களை சேர்ந்த தண்ணீர் கேன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் கேன் வினியோகிக்கும் ஒருவர் முன்பு ஒரு நாளைக்கு 10 முதல் 15 கேன்கள் வரை விற்று வந்தார். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தண்ணீர் கேன் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது ஒருவர் ஒரு நாளைக்கு 30 கேன்கள் வரை வினியோகம் செய்து வருகின்றார்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு கேன் ரூ.35 மற்றும் ரூ.40 என 2 விலைகளில் விற்கப்படுகிறது. பரமத்தி, நாமக்கல் மாவட்டம் மோகனூர், பரமத்திவேலூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பிளாண்ட் அமைத்து தண்ணீர் கேன் வினியோகம் செய்து வருகின்றனர்’’ என்றார்.