

கரூர்:
கரூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கார் டிரைவராக பணியாற்றி வந்த பரமசிவம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு பாராட்டி பேசினார்.
விழா முடிந்ததும் யாரும் எதிர்பாராத வகையில், பரமசிவத்தையும், அவரது மனைவியையும் தனது காரின் பின் இருக்கையில் அமர வைத்த கலெக்டர் அன்பழகன், திடீரென அவரே காரை ஓட்டிக் கொண்டு பரமசிவம் இல்லத்திற்கு அழைத்து சென்றார். இதைப் பார்த்த பொது மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
பரமசிவம் வீட்டிற்கு சென்றதும் தேநீர் அருந்தி அவரது குடும்பத்தினருடன் கலெக்டர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் என்ன உதவிகள் வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம் என்று தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பரமசிவத்தின் பணி நிறைவு பாராட்டு விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
கடந்த 35 ஆண்டுகளாக வாகன ஓட்டுநராக பணிபுரிந்து இன்று ஓய்வு பெற்று செல்லும் பரமசிவத்தின் பணி பாராட்டுக்குரியதாகும். எப்படி மகாபாரதத்தில் இறைவனான கண்ணபிரானே அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து வழிநடத்தினாரோ? அவ்வாறே வாகன ஓட்டுநர்கள் அலுவலர்களை மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்கி பாதுகாப்பான பயணம் அமைய உதவுகின்றனர்.
மேலும் உரிய நேரத்தில் சாலை விதிகளை மதித்து இரவு பகல் பாராமல் பயணம் சிறக்க உதவுகின்றனர். அவ்வாறு உதவியாக இருந்த வாகன ஓட்டுநருக்கு இன்று ஒருநாள் நானே அவருக்கு ஓட்டுநராக இருந்து வழியனுப்பி வைக்கிறேன். அனைத்து ஓட்டுனர்களது சேவை மிகுந்த பணியினை பாராட்டுவதாக தெரிவித்தார்.
இதேபோல் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி மூக்கணாங்குறிச்சியில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் பங்கேற்க சென்ற கலெக்டர் அன்பழகன், திடீரென சின்னமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு சென்றார்.
அங்கு வயது முதிர்வாலும், உடல் உழைப்பின்மையாலும் வறுமையில் வாடிய மூதாட்டி ராக்கம்மாள் (வயது 82) வசிக்கும் ஓலைக்குடிசை வீட்டிற்கு சென்றார். சற்றும் எதிர்பாராத மூதாட்டிக்கு மேலும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் தான் எடுத்து வந்த உணவை அவருக்கும் பரிமாறி, தானும் சாப்பிட்டார்.
அத்துடன் மாதந்தோறும் கிடைக்கும் அரசின் உதவித் தொகையான ரூ.1000 வழங்குவதற்கான ஆணையையும் உடனடியாக வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் அடுத்தடுத்த மனிதநேயம் மிக்க செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. #Karur #KarurCollector #Anbazhagan