திண்டுக்கல் அருகே பதநீர் இறக்கி பனைவெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

கோடை காலம் நெருங்கிய நிலையில் பதநீர் இறக்கும் பணி தீவிரமடைந்து பனை வெல்லம் காய்ச்சி தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கருப்பட்டி
கருப்பட்டி
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூரில் பனை வெல்லம் வியாபாரிகள் முகாமிட்டு விற்பனை செய்து வருகின்றனர். பனைவெல்லம் பண்டைய காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு பொருளாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இதனை இனிப்பு சுவை மிக்க பொட்டுக்கடலை உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து சாப்பிடுவார்கள். மருத்துவ குணம் கொண்ட இதனை கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாலுடன் கலந்து கொடுத்துவந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை நோய்கள் அண்டாது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பலரும் இதை குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். ரசாயன கலப்பு இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் பனை வெல்லத்தை ஒரு சிலர் கருப்பட்டி என அழைப்பர்.

தற்போது பனை வெல்லம் சீசன் துவங்கியிருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோவிலூர் சுற்றுப்பகுதியில் முகாமிட்டு சாலையோரங்களில் பனை வெல்லம் விற்கின்றனர்.

ஒரு கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் அரிதான பொருளாகிவிட்டது. இந்தபோதும் பனை வெல்லத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது.

மேலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பனை வெல்லத்தை அரசு நேரடி கொள்முதல் செய்து பனை வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

பல்வேறு உணவு வகைகளில் மீண்டும் பழைய முறைப்படியே கம்பு, சோளம், சிறுதானிய உணவுகள் போன்றவற்றுக்கு மக்கள் மாறி வரும் நிலையில் பனைவெல்லத்தையும் வாங்கி பயன்படுத்தி அதன் மகத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என இத்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com