கருங்கலில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 4 பேர் கைது

கருங்கலில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அதிக அளவு கஞ்சா விற்கும் கும்பல் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கண்காணித்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா கும்பலை பிடிக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கருங்கல் மார்க்கெட் அருகே வரும் போது அங்கு சந்தேகப்படும் படியாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற் கொண்டனர்.

அதில் அவர்கள் கருங்கல் பகுதியை சேர்ந்த ரெஸ்பான் (வயது 19), விபின்சீனு (20), செல்வராஜ் (65) மேலும் பூட்டேட்டிறியை சேர்ந்த ஏசுதாஸ் என்பவரின் மனைவி தங்கம் (48) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை சோதனை செய்த போது அவர்கள் 4 பேரும் தலா ½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கஞ்சா யாரிடம் வாங்கி வந்தனர்? இதில் யார், யாருக்கு விற்பனை செய்யப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com