

சென்னை:
சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை முடிந்ததும் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த வழக்கு சம்பந்தமாக எனது வீட்டில் இருந்து எந்த ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றவில்லை. எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே என் மீதும், எனது தந்தை மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடப்பதை அறிந்ததும் அவரது வீட்டின் முன்பு ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடினர். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.அழகிரி, கராத்தே தியாகராஜன் ஆகியோர் சி.பி.ஐ. சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சோதனை குறித்து முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறும்போது, ‘ப.சிதம்பரம் 10 ஆண்டுகளாக மத்திய நிதி மந்திரியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி கோரப்பட்டது. அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்த பின்பே முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளனர். இதில் மத்திய மந்திரிக்கு எந்த தொடர்பும் இல்லை. பா.ஜ.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளது’ என்றார்.
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறும்போது, ‘மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றம் சாட்டி வருகிறார். இதனால் அவரை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது. சி.பி.ஐ. மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. இந்த சோதனையின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது. சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கையை ப.சிதம்பரம் சட்ட ரீதியாக எதிர்கொள்வார்’ என்றார்.
சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய போது ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் சிலர் வீட்டுக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனையை தொடர்ந்து நுங்கம்பாக்கம் பை-கிராப்ட்ஸ் சாலையின் நுழைவு பகுதியில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாதபடி போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர். இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் சென்றன.