தலித் வாலிபரை திருமணம் முடித்ததற்காக கர்ப்பிணி பெண் எரித்து கொலை

கர்நாடக மாநிலத்தில், தலித் வாலிபரை திருமணம் முடித்ததற்காக கர்ப்பிணி பெண் தனது குடும்பத்தினரால் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலித் வாலிபரை திருமணம் முடித்ததற்காக கர்ப்பிணி பெண் எரித்து கொலை
Published on

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள குண்டகனாலா கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் பானு பேகம் தனது குடும்பத்தினரால் கடந்த சனிக்கிழமை எரித்துக் கொல்லப்பட்டார். சாயாபண்ண சரணப்பா(24) என்ற தலித் வாலிபரை திருமணம் செய்ததற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. கொலைப் செய்யப்பட்டபோது அவர் கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி பாட்டீல் கூறியதாவது:-

பானு பேகமும், சரணப்பாவும் கோவாவில் கடந்த ஜனவரி மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கர்ப்பிணியான பானு பேகம், தனது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்து தனது கிராமத்திற்கு சனிக்கிழமை திரும்பியுள்ளார்.

ஆனால், அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்று முழுவதும் அவருக்கும் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. பானுவின் பெற்றோர்கள் சரணப்பாவை விட்டு விட்டு வருமாறு விரும்பினர். சரணப்பாவின் தந்தையும் இந்த ஜோடியை ஏற்றுக் கொள்ளவில்லை. 

சம்பவம் நடந்த சனிக்கிழமை, பெற்றோர்களின் கோரிக்கையை காதல் ஜோடி ஏற்க மறுத்த நிலையில், சரணப்பாவின் தந்தை, பானுவின் தாய், சகோதரன் மற்றும் தங்கையுடன் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கினர். அங்கிருந்து தப்பித்த சரணப்பா புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றார். ஆனால் திரும்பி வந்து பார்க்கையில் அவரது மனைவி எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் பல முறை கத்தியால் குத்தப்பட்டும் இருந்தார். 

சரணப்பா படுகாயங்களுடன் காவல் நிலையம் வந்தார். நாங்கள் செல்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. சரணப்பாவின் உறவினர்கள் யாரும் அவருக்கு உதவ முன் வரவில்லை.

இதனையடுத்து, பானுவின் தாய், சகோதரன், தங்கை மற்றும் மாமனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பானுவின் மூத்த சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com