காவிரி வழக்கில் 15 நாட்களுக்கு தினசரி அடிப்படையில் கர்நாடக அரசின் இறுதி வாதம்

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்க்கும் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா தரப்பில் இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காவிரி வழக்கில் 15 நாட்களுக்கு தினசரி அடிப்படையில் கர்நாடக அரசின் இறுதி வாதம்
Published on

புதுடெல்லி:

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்க்கும் மேல்முறையீட்டு வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா தரப்பில் இறுதி வாதம் தொடங்கியது. இந்த இறுதி விசாரணை 15 நாட்களுக்கு தினசரி அடிப்படையில் தொடரும் என்று கூறப்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், நடுவர்மன்றம் 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுவை அரசுகள் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்களின் மீதான விசாரணையை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த மார்ச் 21-ந் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, காவிரி தொடர்பான அனைத்து வழக்குகள் மற்றும் இவை தொடர்பான இடைக்கால மனுக்கள் ஜூலை 11-ந் தேதியில் இருந்து தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இறுதி விசாரணை நடைபெறும். அனைத்து தரப்பினரும் 15 நாட்களில் தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரையில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் சேகர் நாப்டே, ராகேஷ் திவிவேதி, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

கர்நாடகா தரப்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன் தங்கள் தரப்பு இறுதி வாதங்களை தொடங்கினார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த 5 தொகுப்புகள் அடங்கிய அறிக்கையின் அடிப்படையில் வாதங்களை எடுத்துரைக்க தொடங்கினார்.

காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பு ஸ்திரத்தன்மையற்றது, சட்டத்துக்கு முரணானது. 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் மைசூர் மற்றும் மதராஸ் மாகாணங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களை நதிநீர் பங்கீட்டுக்கான அடிப்படையாக கருத முடியாது. அப்போதைய ஒப்பந்தப்படி மதராஸ் மாகாணத்தின் ஒப்புதல் இன்றி மைசூர் மாகாணம் எந்த புதிய நீர்ப்பாசன திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

இந்த ஒப்பந்தத்தை இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுக்கு பிறகு வலியுறுத்த முடியாது. 1956-ல் கர்நாடகா புதிய மாநிலமாக உருவெடுத்த பிறகு முன்பு செய்யப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். அந்த ஒப்பந்தம் எந்த வகையிலும் கர்நாடகாவை கட்டுப்படுத்தாது.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் கருத்து வெறும் கருத்து மட்டுமே என்றும், இது தங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும் காவிரி நடுவர்மன்றம் தெரிவித்து உள்ளது.

பல்வேறு ஒப்பந்தங்கள் கர்நாடக மாநிலத்தின் மீது வலிய திணிக்கப்பட்டுள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பகிர்ந்து அளிக்க காவிரி நடுவர்மன்றம் கடைபிடிக்கும் வழிமுறை கேள்விக்குரியது.

காவிரி நடுவர்மன்றம் பெங்களூரு நகர மக்களின் குடிநீர் பிரச்சினையை முழுதும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை தீர்ப்பது மாநில அரசின் கடமை. இதற்காக காவிரியில் இருந்து தண்ணீர் தரமாட்டோம் என்று மாநில அரசு கூறமுடியாது.

இவ்வாறு நாரிமன் தன்னுடைய வாதத்தில் கூறினார்.

கர்நாடக அரசின் வாதம் இன்றும் (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தொடரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com