கர்நாடக சட்டசபை தேர்தல்: பாரதிய ஜனதாவுக்கு எதிராக களம் இறங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் பிரசாரம் செய்து வருகிறார். #Karnatakaelection #actorPrakashRaj
கர்நாடக சட்டசபை தேர்தல்: பாரதிய ஜனதாவுக்கு எதிராக களம் இறங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் கடுமையான பலபரீட்சை ஏற்பட்டு உள்ளது.

இரண்டு கட்சி தலைவர்களும் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.

தற்போது அவர் பாரதிய ஜனதாவுக்கு எதிராக களம் இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது:-

இந்தியாவில் பல மொழி, சாதி, மதம், இன மக்கள் வாழும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ளது. அனைத்து வகுப்பினரும் சுதந்திரமாக வாழும் உரிமை நமது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை பறிக்கும் வகையில் மத்தியில் ஆளும் மதவாத பா.ஜ.க. அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பாரதிய ஜனதா கட்சி இந்த நாட்டை ஆளக்கூடாது. எல்லோருடைய மத்தியிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கட்சியாக பாரதிய ஜனதா மாறிவிட்டது. எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பது கிடையாது. ஏதாவது ஒரு மோதலை உருவாக்கி மக்களை பிரித்தாளும் முயற்சியில் பாரதிய ஜனதா ஈடுபட்டு வருகிறது.

மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைக்கூலியாகி விட்டது. தென்மாநில மக்கள் மத்தியில் மதவாத விதையை விதைத்து வரும் புற்று நோய் கட்சியான பா.ஜ.க.வை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

காவிரி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே யாருக்கும் கிடையாது. அந்த பிரச்சினையை தீர்க்காமல் அனைவரும் அரசியலாக்க முயன்று வருகின்றனர். காவிரி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும். ஆனால் இதை தீர்க்காமல் பிரச்சினைகளை உருவாக்கி அரசியலில் குளிர்காய்ந்து வருகிறார்கள். மோடி மீண்டும் பிரதமர் ஆகக்கூடாது. கர்நாடகத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசினார்.

பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது கண்டனத்திற்குரியது. நானும் ஒரு பெற்றோர் என்ற முறையில் எனது இதயம் வலிக்கிறது. இந்த மாதிரி குற்றச் செயல்கள் மற்றும் மதவாத மோதல்களை பார்த்துக் கொண்டு எவ்வளவு நாள் பொறுமையாக இருக்க முடியும். இன்னும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. மதவாதத்துக்கு எதிராக நாம் போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Karnatakaelection #actorPrakashRaj

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com