கர்நாடக சட்டசபை தேர்தல்: இதுவரை ரூ.182.39 கோடி பொருட்கள் பறிமுதல் - அதிகாரி தகவல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் இதுவரை மொத்தம் ரூ.182.39 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #KarnatakaElection2018
கர்நாடக சட்டசபை தேர்தல்: இதுவரை ரூ.182.39 கோடி பொருட்கள் பறிமுதல் - அதிகாரி தகவல்
Published on

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் இதுவரை மொத்தம் ரூ.182.39 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 7 லட்சத்து 18 ஆயிரத்து 452 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 2,622 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதில் 217 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். ராஜராஜேஸ்வரி நகர், ஜெயநகர் தொகுதிகளை தவிர்த்து மொத்தம் 57 ஆயிரத்து 416 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 64 ஆயிரத்து 297 வாக்கு எந்திரங்களும், 57 ஆயிரத்து 786 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 57 ஆயிரத்து 786 வி.வி.பேட்களும் பயன்படுத்தப்பட்டன.

மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரத்து 606 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 82 ஆயிரத்து 157-க்கும் அதிகமான போலீசார் மற்றும் ஆயுதப்படை உள்பட பல்வேறு பாதுகாப்பு படை வீரர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பெண்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் மாநிலம் முழுவதும் 600 ‘பிங்க்‘ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

கர்நாடகம் முழுவதும் தேர்தல் அமைதியாக நடந்தது. ஒரு சில இடங்களில் சிறு இடையூறுகள், தகராறுகள் நடந்தன. ஹாவேரி மாவட்டம் தேவகிரி கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே பரவா அக்காசாலி (வயது 58) என்பவர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாதது மற்றும் குடும்ப பிரச்சினையால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அதிகாரிகள் சமாதானம் செய்து வாக்களிக்க வைத்தனர். வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக முன்னாள் கவுன்சிலர் மல்லேஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் உள்ள 280-வது எண் கொண்ட வாக்குச்சாவடியில் வைக்கப்பட்ட வாக்கு எந்திரத்தில் இருந்த ஒரு கட்சியின் சின்னத்தில் ‘மை‘யை கொட்டியது, பெங்களூரு ஹம்பிநகரில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜனதா கவுன்சிலர் ஆனந்த் ஒசூரை தாக்கிய விவகாரங்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவுகள் நடந்தன.

சாமராஜா தொகுதியில் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த 100 பேரை வாக்களிக்க செய்தோம். கொப்பல் மாவட்டம் கங்காவதியில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் அன்சாரியின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து நித்தியானந்தா, பீர் அகமது ஆகியோரை கங்காவதி போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த நாளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.91.58 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.24.83 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.44.28 கோடி மதிப்பிலான தங்கம்- வெள்ளி பொருட்கள், ரூ.40.18 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.21.29 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறாக நேற்று வரை மொத்தம் ரூ.182.39 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமீறியதாக மொத்தம் 1,388 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #KarnatakaElection2018

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com