

பெங்களூர்:
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபா சிறைத் துறையில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக அவரை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவு கர்நாடக மாநில பணியாளர் நலத்துறையால் இன்று பிறப்பிக்கப்பட்டது.
டிஐஜி ரூபா உடன் குற்றம்சாட்டப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் உட்பட மேலும் 4 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பெங்களூர் சிறை துறை வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தியநாராயண ராவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, ”இது ஒரு நிர்வாக ரீதியான நடவடிக்கை. ஊடகத்திற்கு எல்லாவற்றையும் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்றார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த ரூபா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.