காரமடை அருகே மதபோதகரை தாக்கிய 2 பேர் கைது

மத போதகரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரமடை அருகே மதபோதகரை தாக்கிய 2 பேர் கைது
Published on

மேட்டுப்பாளையம்:

காரமடை அருகே உள்ள மருதூர் பவர் ஹவுஸ் தனியார் தோட்டத்தில் கெஸ்ட் அவுஸ் பகுதியில் மத போதகர் ராஜேஷ் (41) என்பவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஜெபம் நடத்தி வருகிறார்.

நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி ராஜேஷ் ஆராதனை நடத்தி கொண்டிருந்தார். இதில் அவரது மனைவி ஜான்சி, ராஜேஷ் தம்பி பிரவிண் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு வந்த 4 பேர் ராஜேசை வெளியே வருமாறு அழைத்தனர். அவரும் வெளியே வந்தார்.

அவரிடம் மைக் சத்தம் அதிகமாக உள்ளது என்றனர். உடனே ராஜேஷ் மைக் சத்தத்தை குறைத்து விடுகிறேன் என கூறி உள்ளார். திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் ராஜேசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் அறைந்து, தலையில் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ராஜேஷ் சட்டையை பிடித்து கிழித்ததாகவும் தெரிகிறது.

இதில் காயம் அடைந்த ராஜேஷ் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவரை மறுமலர்ச்சி அனைத்து கிறிஸ்தவ மக்கள் அமைப்பு தேசிய தலைவர் ராஜ்குமார் மற்றும் மத போதகர்கள் பார்த்து ஆறுதல் கூறினர்.

இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இந்த சம்பவத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பது குறித்து முடிவு செய்யப்படும் என ராஜ்குமார் தெரிவித்தார்.

மத போதகரை தாக்கியது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு இது தொடர்பாக மருதூரை சேர்ந்த ரகு, புஜங்கனூர் மகேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com