காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாங்கனி திருவிழா

காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாங்கனி திருவிழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் இறைத்த மாங்கனிகளை தெருக்களில் நின்ற ஆண்களும், பெண்களும் போட்டி போட்டு எடுத்தனர்.
காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
Published on

காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 13-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. 14-ந் தேதி காலையில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு, புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும், முத்து சிவிகையில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று (15-ந் தேதி) மாலை பிச்சாண்டவர் மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சுமார் 3 மணிநேரம் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாரதனை நடந்தது.

விழாவின் 4-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 6 மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்துமர்ந்து திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்கள் மாங்கனி யுடன் அர்ச்சனை செய்து பட்டு வஸ்திரம் சாற்றி வழிபாடு நடத்தினர். அப்போது தெருவெங்கும் உள்ள வீடுகள், வணிக கட்டிடங்களில் மேல் தளங்களில் பக்தர்கள் நின்று மாங்கனிகளை இறைத்து நேர்த்திகடனை செலுத்தினர். அப்போது பக்தர்கள் இறைத்த மாங்கனிகளை தெருக்களில் நின்ற ஆண்களும், பெண்களும் போட்டி போட்டு எடுத்தனர். சாமி ஊர்வலம் பாரதியார்வீதி, கென்னடியார்வீதி, மாதாகோவில் வீதி, லெமர்வீதி, வழியாக சென்று மாலை 6 மணிக்கு பாரதியார் வீதியை சென்றடைகிறது. அதன்பின்பு அமுதுபடையல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா நடைபெறுவதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாங்கனித்திரு விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாளை(17-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com