நெல்லை மாவட்டம் முழுவதும் கந்துவட்டி வசூலிப்பவர்கள் பட்டியல் சேகரிப்பு

நெல்லை முழுவதும் கந்துவட்டி வசூலிப்பவர்கள் பட்டியலை தயாரிக்க ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் முழுவதும் கந்துவட்டி வசூலிப்பவர்கள் பட்டியல் சேகரிப்பு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட அலுவலக வளாகத்தில் கடந்த 23-ந்தேதி காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி சாருண்யா (6), அக்சய பரணிகா (2) ஆகிய 4 பேரும் கந்துவட்டி பிரச்சினையால் உடலில் மண்எண்ளெ ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தனர். அவர்களது உடலில் தீப்பிடித்து எரியும் காட்சி வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேஸ்புக், வாட்ஸ்-அப், யூடியூப், டூவிட்டர் என்று அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த படங்கள் வெளியாகி உலகம் முழுவதும் இருந்து கண்டன குரல்கள் எழுப்பின. தேசிய மனித உரிமை ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் ‘கந்துவட்டி’ புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். மேலும் கந்துவட்டி பிரச்சினையில் புகார் செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ‘ஹெல்ப் லைன்’ செல்போன் நம்பரும் வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

இதன் பேரில் பல புகார்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் உள்ளது.

இதன் பேரில் சாம்பவர் வடகரை போலீசார் முதன் முதலாக வழக்குப்பதிவு செய்து கந்துவட்டிக்காரரை கைது செய்தனர். சேர்ந்தமரம் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னீர்பள்ளம் போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் கந்துவட்டி வசூலிப்பவர்கள் யார்? யார்? என்று ரகசியமாக பட்டியல் தயாரிக்க ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டார்.

இதன் பேரில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தங்கள் பகுதியில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் யார் என்று பட்டியல் தயார் செய்து வருகிறார்கள். நெல்லை மாநகரத்தில் உள்ள போலீசாரும் இந்த பட்டியலை தயார் செய்து வருகிறார்கள்.

இவர்கள் முறைப்படி நிதி நிறுவனமாக பதிவு செய்து வட்டிக்கு கொடுக்கிறார்களா? அல்லது பதிவு செய்யாமல் மறைமுகமாக கொடுக்கிறார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்கள் சேகரித்து வருகிறார்கள். இவர்களுக்கு பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் உள்ளார்களா என்றும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதுபோல மாவட்டத்தில் கந்து வட்டி குறித்து புகார் செய்யப்பட்டால் உடனடியாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com