

ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.
வருடந்தோறும் கோடைக் காலங்களில் இந்த ஏரிகள் வற்றி விடுவதால் குடிநீர் பிரச்சினை தலைவிரித் தாடுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்று இணைத்து 1485 ஏக்கர் நிலபரப்பில் பிரம்மாண்ட அணை கட்டப்படும் என்று அறிவித்து ரூ. 330 கோடியை ஒதுக்கினார். அதன்படி நீர் தேக்கம் அமைக்கும் பணிகள் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
இழப்பீடு கேட்டு விவசாயிகள் கடந்த 8 ஆண்டுகளாக போராடிய பகுதியில் நேற்று இறுதி கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொதுப் பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் மற்றும் அதிகாரிகள் ஊத்துக்கோட்டை வந்தனர்.
அவர்கள் ஊத்துக்கோட்டை பேருராட்சி எல்லையில் உள்ள அம்பேத்கார் நகரில் இருந்து கண்ணன்கோட்டை நீர் தேக்கம் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது தலைமை பொறியாளர் அசோகன் நிருபர்களிடம் கூறியதாவது.-
கண்ணன்கோட்டை நீர்த் தேக்கம் அமைக்கும் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக இழுபறி நீடித்து வந்த இடத்தில் தற்போது இறுதிக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் வருகிற பருவ மழை நீரை சேமித்து வைத்து சென்னை நகர மக்களின் குடிநீருக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தில்லைக்கரசி, உதவி செயற்பொறியாள் ரவிசந்திரன், உதவி பொறியாளர்கள் பாபு, தனசேகர், சுந்திரம், பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.