புதுவையில் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த கஞ்சா கும்பல் கைது

புதுவையில் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிய கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையில் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த கஞ்சா கும்பல் கைது
Published on

பாகூர்:

புதுவை தவளக்குப்பம் அருகே ஆண்டியார்பாளையம் காலனி முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் சசி அரிகரன் (வயது 20). இவர் வில்லியனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்து சசி அரிகரன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நல்லவாடு பகுதியை சேர்ந்த கஞ்சா பழக்கம் உள்ள கும்பல் ஒன்று சசி அரிகரனை திடீரென வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி சசி அரிகரன் மோட்டார் சைக்கிளை கடத்தி சென்றது.

அங்குள்ள முந்திரி தோப்புக்கு சசி அரிகரனை கொண்டு சென்ற அந்த கும்பல் அங்கு அவருடைய ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை செய்தது.

இதுபற்றி தகவல் அறிந்த சசி அரிகரனின் உறவினர்கள் மற்றும் ஆண்டியார் பாளையம் காலனி மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் மாணவரை கடத்தி சென்ற கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதையடுத்து கஞ்சா கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த சசி அரிகரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே மாணவரை கடத்தி சென்று நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கும்பலை கைது செய்ய கோரி ஆண்டியார் பாளையம் காலனி மக்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மாணவரை சித்ரவதை செய்த கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கும்பல் அங்குள்ள சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்தது. அவர்களை இன்று அதிகாலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com