கந்துவட்டி கொடுமைக்கு குடும்பமே பலி: போலீஸ் ஏட்டு மிரட்டியது அம்பலம்

நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு பலியான இசக்கிமுத்துவிடம் போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக பேசி மிரட்டியதாக கூறப்படும் செல்போன் ஆடியோ வெளியாகியுள்ளது.
கந்துவட்டி கொடுமைக்கு குடும்பமே பலி: போலீஸ் ஏட்டு மிரட்டியது அம்பலம்
Published on

தென்காசி அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி இசக்கிமுத்து. மனைவி சுப்புலட்சுமி, மற்றும் 2 குழந்தைகளுடன் கந்துவட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கந்துவட்டி கொடுமைக்கு ஆளான இசக்கிமுத்து, அது தொடர்பாக புகார் மனு அளிக்க கடந்த 23-ந்தேதி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு வந்தார். அப்போது அவர் திடீரென மனைவி மற்றும் குழந்தைகளின் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்தார்.

அவர் தனது உடலிலும் தீவைத்துக்கொண்டார். இந்த சம்பவத்தில் இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சாருண்யா, அட்சய பரணிகா ஆகிய 4 பேரும் உடல் கருகினர். அவர்களில் சுப்புலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் இறந்தனர்.

இசக்கிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தில் அனைவருமே பலியாகி விட்டனர்.

இசக்கிமுத்து அதே ஊரை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் ரூ.1.40 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்கு வட்டியும், அசலுமாக ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் செலுத்தியும், தொடர்ந்து முத்துலட்சுமி குடும்பத்தினர் கந்துவட்டி கேட்டு மிரட்டி வந்தனர்.


இதுபற்றி இசக்கிமுத்து போலீசாரிடமும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

கந்துவட்டி கொடுமைக்கு நெல்லையில் குடும்பமே பலியானதையடுத்து கந்து வட்டி தடை சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனிடையே இசக்கிமுத்துவிடம் போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக பேசி மிரட்டியதாக கூறப்படும் செல்போன் ஆடியோ வெளியாகியது. இதை தே.மு.தி.க. நிர்வாகிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த ஆடியோவில் உள்ள உரையாடலை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். மொத்தம் 12 பாகங்கள் கொண்ட அந்த ஆடியோவில் கந்துவட்டி விவகாரம் தொடர்பாக பல்வேறு உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தற்கொலை செய்து கொண்ட சுப்புலட்சுமியும், கந்துவட்டி கேட்டு மிரட்டிய முத்துலட்சுமியும் பேசிக் கொண்ட உரையாடல் முத்துலட்சுமியும், இசக்கிமுத்துவும் பேசியது, சுப்புலட்சுமியிடம் போலீசார் பேசியது, ஆய்க்குடி போலீசார் இசக்கி முத்துவிடம் மிரட்டி பேசியது ஆகியவை ஆடியோவில் இடம் பெற்றுள்ளது.

இசக்கிமுத்துவுக்கு தெரியாமலேயே சுப்புலட்சுமி கடன் வாங்கிய சம்பவங்களும் இந்த ஆடியோ மூலம் தெரியவந்துள்ளது. இசக்கிமுத்துவிடம் கடன் கொடுத்தவர்களும் தனித்தனியே போலீசில் புகார் செய்தும், அதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படாததும் ஆடியோ மூலம் வெளிவந்துள்ளது.

தற்கொலை செய்த இசக்கிமுத்துவிடம் போலீஸ் ஏட்டு போனில் விசாரிக்கும் போது, ‘வாங்கிய கடனை கொடுக்க வக்கு இல்லனா சாக வேண்டியதுதானே’ என பேசியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆடியோக்களை முழுமையாக கேட்டு விசாரணை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார் உத்தரவிட்டார்.

தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இந்த ஆடியோ விவகாரம் குறித்து டி.எஸ்.பி. மணிகண்டன் விசாரணையை தொடங்கியுள்ளார். இசக்கிமுத்துவிடம் மிரட்டியதாக பேசிய போலீஸ் ஏட்டு யார்? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com