

கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சாமி (வயது 36). இவர் கிராமச்சாவடி தெருவில் விளையாட்டு ஆடை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கும் சுகந்தி (32) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. சஞ்சய் (13) என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் சுகந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் (39) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சுகந்தி தனது கணவரின் கடைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். மேலும் செல்போன் ரீசார்ஜும் செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று சாமி தனது கடையில் மனைவியின் செல்போனை ஆய்வு செய்தார். அப்போது சுகந்தியும், சுதாகரும் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய திட்டமிட்ட ஆடியோ உரையாடலை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த ஆடியோ உரையாடலை வைத்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சாமி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுகந்தி, சுதாகர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பாண்டியராஜன் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுதாகர் குமுளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர். தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் பணிபுரிந்து வருகிறார். கள்ளக்காதல் வழக்கில் போலீஸ் ஏட்டும் சிக்கி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews