

மதுரையில் நடந்த கட்சி தொடக்க விழாவில் பங்கேற்றவர்களுக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள நன்றி கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
உலகத் தாய்மொழி தினமான பிப்ரவரி 21-ந்தேதி அன்று “மக்கள் நீதி மய்யத்தின்” தொடக்க விழா சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடைபெற்றது.
மிகுந்த எழுச்சியுடனும், கட்டுப்பாட்டுடனும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை வெற்றி பெறச்செய்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் நன்றியை மதுரை மாநகர மக்களுக்கு காணிக்கையாக்குகிறோம். தொடர்ந்து நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.
விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கும், டெல்லி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதிக்கும் மனமார்ந்த நன்றியும், வணக்கமும்.
மாநாடு நடைபெற்று முடிகிற வரையில் இருந்து உதவிய பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு ஒத்துழைத்துச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. விழா நிகழ்வுகளை உயிர்ப்புடனும் துல்லியமாகவும், உலகமெங்கும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு சேர்த்த காட்சி ஊடகத்துறை, அச்சு ஊடகத்துறை மற்றும் சமூக வலைத்தளங்கள் சார்ந்த அனைத்து பெருமக்களுக்கும் இருகரம் கூப்பி நன்றி சொல்கிறோம்.
மாநாட்டு நிகழ்வுகளை தொலைவில் இருந்து பார்த்து விட்டு வாழ்த்திய உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் எங்கள் நன்றியும் வணக்கமும். மக்கள் நீதி மய்யத்தின் நடவடிக்கைகளை உறுதி செய்யவும், செய்ய வைக்கவும் உருவாக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழு உறுப்பினர்களின் ஒரு பகுதியினரை மாநாட்டு மேடையில் அறிமுகப்படுத்தினோம்.
உங்களின் தொடர்ந்த அன்பும், ஒத்துழைப்பும் எங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும்.