கமல்ஹாசன் புதிய கட்சி தொடக்கம் - அரசியல் தலைவர்கள் கருத்து

நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நடந்த கூட்டத்தில் தனது கட்சிப் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது அரசியல் கட்சி குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.
கமல்ஹாசன் புதிய கட்சி தொடக்கம் - அரசியல் தலைவர்கள் கருத்து
Published on

நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நடந்த கூட்டத்தில் தனது கட்சிப் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

அவரது அரசியல் கட்சி குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

அமைச்சர் ஜெயக்குமார் (அ.தி.மு.க.):- கமல்ஹாசன் மரபணு மாற்றப்பட்ட விதை. அது யாருக்கும் பயன்படாது. எனவேதான் இந்தியாவில் அதை பயன்படுத்தப்படுவது கிடையாது. முதல்-அமைச்சர் நாற்காலி ஒன்றும் பொம்மை கிடையாது. மார்க்கெட்டில் போய் வாங்குவதற்கு இவர்கள் எல்லாம் காகிதப்பூ தான். நிச்சயமாக காகிதப்பூ மணமும் வீசாது. மலரவும் மலராது.

தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா):- கமல்ஹாசன் கட்சி தொடங்குவது வேண்டுமானால் தலைப்பு செய்திகளில் வரும். இதை வைத்து அவர் தலைவராக முடியாது. சினிமாவில் ஏற்பட்ட போட்டியை சமாளிக்க முடியாமல் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். இதெல்லாம் அரசியலில் இயற்கையாக நடந்து வருகிறது.

வீரப்பமொய்லி (காங்கிரஸ், முன்னாள் மத்திய மந்திரி):- ஏற்கனவே நிறைய பிராந்திய கட்சிகள் இருக்கும் நிலையில் இவரது கட்சிக்கும் இடம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இல்லையெனில் பிரதான கட்சிகளுடன் (தி.மு.க., அ.தி.மு.க.) கூட்டணி வைத்துக் கொள்வார்கள்.

நடிகை குஷ்பு (காங். செய்தி தொடர்பாளர்):- ஒவ்வொருவரும் அரசியலில் ஈடுபடுவதை வரவேற்கிறேன். கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கி இருப்பதற்காக அவருக்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தல்களில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர். எனது ஏற்றத்தாழ்வில் என்னுடன் பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்.

நடிகர் பாக்யராஜ்:- நடிகர் கமல்ஹாசன் அரசியலில் நுழைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படும் நிலையில் அவர் ஊழலை வேரோடு அகற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க.):- கமல்ஹாசனின் அரசியல் பயணத்துக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். தேர்தல் சமயத்தில் கூட்டணி தொடர்பான முடிவு எடுப்போம்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com