என்னை மன்னித்துவிடு ஆசிபா - சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கமல் குரல்

காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருக்கமான இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். #JusticeForAshifa
என்னை மன்னித்துவிடு ஆசிபா - சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கமல் குரல்
Published on

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

எதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார். திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா இம்மாத கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக சிறப்பு புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார். மேலும், 18 வயதுக்கு உள்பட்ட ஒருவரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார்.

8 பேர் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தியுள்ளது. மாநில போலீசார் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கில் கைதான வரை விடுவிக்க வேண்டும் என அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் இருவர் தற்போது போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து, சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டும் என #JusticeForAshifa என்ற ஹேஷ்டேக்கில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் உருக்கமான இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில்:-

சிறுமி ஆசிபாவுக்கு நிகழ்ந்துள்ள கொடூரம் உங்களுக்கு புரிய அவள் உங்களது மகளாக இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாக இருந்திருக்கலாம். ஒரு மனிதனாக எனக்கு மிகுந்த கோபம் வருகிறது. ஒரு தந்தையாக, ஒரு குடிமகனான ஆசிபாவை பாதுகாக்க தவறிவிட்டேன். என்னை மன்னித்துவிடு குழந்தையே, உனக்கான பாதுகாப்பான நாட்டை நாங்கள் உருவாக்க தவறிவிட்டோம். எதிர்காலத்தில் உன்னைப்போல வேறு யாருக்கும் இந்த கொடூரம் நடந்து விடக்கூடாது என்பதற்காக நான் போராடுவேன். உன்னை நினைவு கூர்கிறோம், உன்னை மறக்கவும் மாட்டோம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com